Thursday, February 25, 2010
சுஜாதா... எழுத்திலடங்கா எண்ண அலைகள்!
சுஜாதா இறந்ததை அறிந்த போது வருத்தம் வார்த்தையில் வரவில்லை.
இன்று அவர் பற்றிய நரசிம்மின் வார்த்தைகளை படித்தபொழுது எழுந்த நினைவலைகள் இங்கே.
வலையுலகம் இல்லா காலத்தில், தாய்மொழி மட்டும் அறிந்திருந்த எண்ணிலடங்கா வாசகர்களுக்கு, பல துறை சார்ந்த அறிவையும், பொழுது போக்காக, ஒரு நண்பராக - its no big deal என்ற அளவில், கல்லாததை பற்றிய பயம் தோற்றுவிக்காமல், கற்பதற்கான ஆர்வத்தை உருவாக்கியவர்.
எப்பொழுதும், எந்த வகையில் பார்த்தாலும், ஒரு முற்போக்கானவராகவும், இளமையான பார்வைகளை, துள்ளல் குறையாமல் அதே சமயம் முதிர்ச்சியாக, நிலை தளராமல் கையாள்வதிலும் அவரை தவிர்த்து தமிழ் எழுத்துக்கள் முழுமை அடையா.
அனுபவித்ததை பகிர்வதாக இருந்தாலும் சரி, கற்பனைகளின் ஆனந்தங்களை உணர்த்துவதனாலும் சரி, பள்ளி கல்வியின் இடைவெளி நிரப்புவதிலும் சரி, எந்த பக்கம் யோசித்தாலும், யோசித்து முடிக்கவும் முடியவில்லை, அவரை சிலாகிக்காமலும் இருக்க முடிவதில்லை.
அவர் எழுத்தின் பின் இருந்த ஊக்கம் பற்றி எனக்கு எப்போதும், இப்போதும், அளவிலங்கா ஆர்வம் உண்டு. அவர் கடைசி துளி உயிர் பிரியும் போது கூட, பகிரத்துடிக்கும் எண்ணங்களையே அவர் மனம் நினைத்திருந்துக்க கூடும் என்று நினைக்கிறேன்.
செறிந்த பண்பாளராகவும், தெறிந்த சிந்தனையாளராகவும், எழுத்தின் வாயிலாக நம் தேடலை தூண்டி அதன் மூலம் நம்மில் பலரின் சுயவளர்ச்சிக்கு வித்திட்ட வகையில், பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவராக என் நினைவில் அவர் என்றும் இருப்பார்.
Subscribe to:
Posts (Atom)