Friday, October 10, 2008

உலகப் பொருளாதாரமும் ஐரோப்பிய நங்கையும்...

நான் இருந்த மூணு நாட்களாக அழுது வடிந்த வானம், இன்று காலை பனி கோர்த்த மலராய் பளீர் என விடிந்திருந்தது. என் மனநிலைக்கு எதிர்மாறாய். ஜன்னலுக்கு வெளியே, hyde park அதன் அடர்ப்பச்சை புல்வெளியோடு இங்கிலாந்தின் அழகை, லண்டனின் நெரிசலையும் மீறி பறைசாற்றி கொண்டிருந்தது.

எதிரில் கோர்டன் பிரவுன் உலகப் பொருளாதாரத்தை உற்சாகப்படுத்த முயன்று கொண்டிருந்தார் - பிபிசி வழியாக.
அடப்போங்க...நீங்கெல்லாம் ரொம்ப லேட் & வேஸ்ட்! நேற்று நான் தொலைத்த லட்சங்கள் திரும்பவா போகிறது என்று நினைத்த போது, என் வைஷுவின் வார்த்தைகள் அரவணைப்பாய் ஒலித்தது...

"நாம வேணா திரும்ப அங்கேயே போலாம். நானும் வேலைக்கு போறேன்"

"ம்ம்ம்...சம்பாதிச்சிக்கலாம், ஆனா போன வாரம் மேலும் கொஞ்சம் மார்ஜின் குடுங்கன்னு பேங்க் ல கேட்ட போது, நான் யு கே அவசரமா போறேன், ஒரு வாரத்துல ஏற்பாடு பண்றேன் - அதுக்குள்ளே 25% விழுந்துடுமான்னு இருந்துட்டேனேனு நினைச்சா கஷ்டமா இருக்குடா. போன மாசமே வந்தது போதும்னு வித்திருந்தா பாதி வீட்டுக்கடனை அடிச்சிருக்கலாம்" என்று சோகப்புராணம் படித்தேன்.

"நம் நேரம் அப்படி. எல்லாம் நம் கையிலா இருக்கு" என்று சமாதானப்படுத்த முயன்றாள்.

"அப்படி இல்லேடா. இதை என்னால் சமாளிச்சிருக்க முடியும் ஆனா பதட்டப்படாம இருக்கறதா நினைச்சி கவனக்குறைவா இருந்துட்டேனே" என்றேன்.

வேறொரு சமயமாக இருந்திருந்தால், இல்லை, நேரில் பேசியிருந்தால் பதில் வேறாகி இருந்திருக்கும். ஆனால் இப்போதைக்கு மௌனமே பதிலாய் இருந்தது. silence unsettled me.

"okay da. I'm bit...well, quite depressed but not broken. என்ன இருந்ததில் தானே போயிற்று. anything that doesnt kill us can only make us stronger" என்று ஏதோ உளறினேன்.

"ம்ம்ம் போனது போகட்டும். நீ பத்திரமா வா. இப்ப குட்டிக்கிட்ட பேசு...ரொம்ப நேரமா வெயிட்டிங்" என்று சேனல் மாற்றிவிட்டாள்.

"அப்பா... ஆர் யு கமிங் டுடைய்ய்...." என்று இன்னமும் மாறாத பிரிட் அக்சென்ட்டில் என் மனசை லேசாக்கினான்.

"ஆமாண்டா கண்ணா கிளம்பிட்டே இருக்கேன்"

"வாட் டைம்"

"5 மணிக்கு நாளை காலை- நீ தூங்கி எழுந்திருக்கும்போது, நான் உன்னோட இருப்பேண்டா கண்ணா. நீ சமர்த்தா இரு" என்றேன்.

"ஓகே...ப பை ..." யோடு ஓடும் சத்தம் கேட்டது.

அடுத்து எப்போதாவது கிடைக்கும் "லவ் யு" ஒலியோசையோடு உயிரோசையும் கலந்து மனதிற்கு மருந்தானது.

"சரி...இப்ப போய் குட்டிக்கு அந்த trampoline வாங்கிக்கிட்டு கிளம்பி வரேன்" என்றேன்.

"அதெல்லாம் வேணாம். வீட்டுக்கு வா போதும்" என்றாள் உறுதியாக.

"சரி...இன்னும் 10 நாள்ல இன்னொரு விசிட் இருக்கு. அப்ப வேணாப் பார்த்துக்கலாம். இப்ப வேற ஏதாவது வாங்கிட்டு வரேன்" என்று ஜகா வாங்கினேன்.

அடுத்த சில மணிநேரங்கள் பறந்தன.

வேற இடம்...மெல்ல நகர்ந்த நீண்ட கியூ. மீண்டும் கோர்டன் பிரவுன்...இந்த முறை வானத்திலிருந்து...(அதாங்க...ஸ்கை டிவி).

வளையோசையென கலகலவென நங்கையர் நகைக்கும் ஓசை - வீங்கியிருந்த மனசு ஆவலாய் சேனல் மாறியது.

இளவயது ஐரோப்பிய நங்கையர் கூட்டம்...அதில் ஒருத்தி வேகமாய் துணி உரித்துக் கொண்டிருந்தாள்.

அரை நிமிடத்தில் மூணு லேயர் துணி உரித்த பின் மீதமிருந்தது உடலோடு ஒட்டிய பின்னலாடை மட்டுமே.

பாதி கருப்பு வண்ணம் பூசிய பளிங்கு சிற்பமாய் மிளிர்ந்தாள்.

அட..லூவ்ர் ம்யுசியம்ல தேடுவாங்களே...என்ற கவலையோடு..அடுத்தது என்ன ஒட்டியாணமாய் இருக்கும் பெல்ட்டா இல்லை...அந்த பூப்பாதங்களை மறைக்கும் ஷூக்களா ...கால் நகம் பூசியிருப்பளோ..என மனசு உற்சாகமாய் ஆராய்ந்தது.

உள்மனதிலிருந்து ஒரு கூச்சல்....மேலே ஒரு முகமிருக்குமே என்று.

ஏறிட்டு பார்த்தால்...அழகாய் புன்முருவலிட்டாள். சந்தேகமேயில்லை...அவள் ஒரு பிரெஞ்சு ஆக மட்டுமே இருக்க முடியும்.

அவளொரு சிரிக்கும் சிற்பமா இல்லை சிலையாய் ஒரு கவிதையா என்ற குழம்பியபோது...

"sir....this way please..." என்று வேறொரு பெண் குரல்.

அடுத்தது என் முறை...பயணியர் பாதுகாப்பு சோதனைக்கு. :)